UPDATED : ஆக 03, 2026 06:28 PM
ADDED : ஆக 03, 2026 06:31 PM

கோவை:
கோவை மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதன் வாயிலாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற புதிய பாடப்பிரிவுகளை புகுத்துவதன் வாயிலாகவும் மாணவர் சேர்க்கையை உயர்த்த முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
ரேஸ்கோர்ஸ், புலியகுளம், தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உட்பட கோவை மாவட்டத்தில் ஆறு அரசு கலைக் கல்லுாரிகள் உள்ளன.
கடந்தாண்டு இந்த ஆறு கல்லுாரிகளிலும் 4,219 இடங்களில் 3,518 மாணவர்கள் சேர்ந்திருந்தனர். 701 இடங்கள் காலியாக இருந்தன.
நடப்பாண்டு 4,382 இடங்களில், 3,366 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1,016 இடங்கள் காலியாக உள்ளன. சேர்க்கை சதவீதம் 83.39 சதவீதத்திலிருந்து 76.81 ஆக குறைந்துள்ளது. கல்வியாளர்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், இதற்கு தீர்வு என்ன என, கல்லுாரி முதல்வர் ஒருவரிடம் நமது நிருபர் கேட்டார்.
அவர் கூறியதாவது:
பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் போன்ற பாரம்பரிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் பெரிதும் விரும்புவதில்லை. அரசு கலைக் கல்லூரிகளில் தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் குறைவாக உள்ளன.
அதே நேரம், தனியார் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட நவீன பாடப்பிரிவுகள், மேம்பட்ட ஆய்வக வசதிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கேம்பஸ் தேர்வு வாய்ப்புகள் மாணவர்களை அதிகம் ஈர்க்கின்றன.
அரசு கலைக் கல்லுாரிகளில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, வேலைவாய்ப்புக்கு ஏற்ற புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசுக் கல்லுாரிகள் இடங்கள் சேர்க்கை காலியிடம்
ரேஸ்கோர்ஸ் 1,996 1,855 141
புலியகுளம் 460 317 143
மேட்டுப்பாளையம் 576 333 243
தொண்டாமுத்துார் 410 324 86
பொள்ளாச்சி 420 344 76
வால்பாறை 520 193 327
மொத்தம் 4,382 3,366 1,016
கல்லுாரிவாரியாக அட்மிஷன்
கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கடந்தாண்டு 1,961 இடங்களில் 1,856 பேர் சேர்ந்திருந்தனர். இந்தாண்டு 1727 இடங்களுடன் மேலும், 269 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. 1,996 இடங்களில் 1,855 பேர் சேர்ந்துள்ளனர்.
புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் கடந்தாண்டு 418 இடங்களில் 370 மாணவிகள் சேர்ந்தனர். இந்தாண்டு கூடுதலாக 50 இடங்கள் சேர்த்து 460 இடங்களில், 317 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். சேர்க்கை சதவீதம் 68.91 ஆக உள்ளது.
மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கடந்தாண்டு 490 இடங்களில், 382 பேர் சேர்ந்திருந்தனர். 20 சதவீதம் அதிகரிக்கப்பட்ட கூடுதல் இடங்களுடன் 576 இடங்களில், 333 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். கூடுதல் இடங்கள் அதிகரிக்கப்பட்டதால் சேர்க்கை சதவீதம் 57.81 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கடந்தாண்டு 410 இடங்களில் 323 பேர் சேர்ந்தனர். இந்தாண்டு 324 பேர் சேர்ந்துள்ளனர்.
பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கடந்தாண்டு 420 இடங்களில் 370 பேர் சேர்ந்தனர். இந்தாண்டு 344 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் விடுதி வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்தாண்டு 520 இடங்களில் 217 பேர் சேர்ந்தனர். இந்தாண்டு 193 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். சேர்க்கை சதவீதம் 37.11.
