UPDATED : மார் 17, 2025 12:00 AM
ADDED : மார் 17, 2025 06:14 PM

சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் நாராயணன், இன்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையம் என்ற இந்த மையம், விண்வெளிப் பயன்பாடுகளுக்கான வெப்ப அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னணி நாடாக நிலை நிறுத்தும்.
இயந்திரப் பொறியியல் துறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஆராய்ச்சிக்கூடத்தில், இந்தியாவில் விரிவடைந்து வரும் விண்வெளி லட்சியங்களில் தொடர்புடைய விண்கலம், ஏவுதள வாகனங்களின் வெப்ப மேலாண்மை தொடர்பான முன்னேற்றங்களில் கவனம் செலுத்தப்படும்.
இந்த நிகழ்வின் போது, இஸ்ரோ தலைவர் நாராயணன் முன்னிலையில் ஆற்காடு ராமச்சந்திரன் கருத்தரங்கு மண்டபத்தை சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி திறந்து வைத்தார்.
இந்த உயர் சிறப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, வரவிருக்கும் சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட நீண்ட விண்வெளிப் பயணங்களை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படும்.
இஸ்ரோவின் டாக்டர் விக்ரம் சாராபாய் பேராசிரியர் சோமநாத், சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்த மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அர்விந்த் பட்டமட்டா, சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறைத் தலைவரான பேராசிரியர் சந்திரமவுலி, சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையின் பயிற்சிக்கான பேராசிரியர் வெங்கிடகிருஷ்ணன், சென்னை ஐஐடி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.