UPDATED : ஏப் 04, 2025 12:00 AM
ADDED : ஏப் 04, 2025 10:18 AM

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. அதே ஊரைச் சேர்ந்தவர் மந்திரகுமார், 40. இருவரும் கட்டட தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் கந்தசாமியை மொபைல் போனில் அழைத்து பேசிய மர்ம நபர், 10ம் வகுப்பு படித்துள்ள அவரது மகளுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை, 25,000 ரூபாய் வந்திருப்பதாக கூறி, கூகுள் பே எனும் ஆன்லைன் பண பரிமாற்ற செயலி எண்ணையும் கேட்டனர்.
அவரிடம் கூகுள் பே இல்லாததால், மந்திரகுமாரின் கூகுள் பே எண்ணை கொடுத்தார். எதிர்முனையில் பேசிய நபர், இரண்டு முறை ஓ.டி.பி., எண்ணை கூறி, அதை பதிவிட செய்து, மந்திரகுமார் வங்கி கணக்கில் இருந்த, 82,998 ரூபாயை மோசடியாக பறித்தனர்.
மந்திரகுமார் ஆடு விற்றது, மனைவி பீடி சுற்றி கஷ்டப்பட்டு சம்பாதித்து, அடகு வைத்த நகைகளை மீட்க வைத்திருந்த பணம் இது. சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே போல, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செருதப்பட்டியைச் சேர்ந்த சத்யா என்பவரிடம், கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, அவரது வங்கி கணக்கில் இருந்து, 17,500 ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

