கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிராண வாயு சிகிச்சை மையம்
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிராண வாயு சிகிச்சை மையம்
UPDATED : நவ 01, 2024 12:00 AM
ADDED : நவ 01, 2024 12:19 PM
சென்னை:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உயரழுத்த பிராண வாயு சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது, என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
வெடி விபத்தில் காயமடைந்து வருபவர்களுக்கு என, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் துவக்கப்பட்ட சிறப்பு வார்டை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தீபாவளி பண்டிகையின் போது, வெடி விபத்தில் காயமடைந்து வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு, இரண்டு நாட்களுக்கு முன் துவக்கப்பட்டது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தீபாவளியன்று வெடி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில், வெடி விபத்தில் நான்கு பேர் சிறிய காயமடைந்து, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மூன்று பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். அவர்களும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவர். மதுரையில் ஐந்து பேர், தஞ்சையில் ஆறு; திருச்சியில் மூன்று வெடி விபத்தில் காயமடைந்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், புதிதாக தோல் வங்கி துவக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன், உயரழுத்த பிராணவாயு சிகிச்சை மையமும் துவக்கப்பட்டது. இதுவரை, 44 பேர் இச்சிகிச்சை வாயிலாக பலன் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 1,353 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் அனைவரும் பணியில் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.