முதல்வருடன் பேசிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் தகவல்
முதல்வருடன் பேசிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் தகவல்
UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 10:19 PM

சென்னை:
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று துணை முதல்வர் உதயநிதியை, கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு, முதல்வர், துணை முதல்வர் மட்டுமின்றி, கட்சி வேறுபாடுகளை கடந்து, மாணவர் நலனே முக்கியம் என்பதை உணர்ந்த அனைத்து கட்சியினரும், தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, சர்வ சிக் ஷா அபியான், ஆர்.என்.எஸ்.ஏ., என்ற பெயர்களில் இருந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, சமக்ர சிக் ஷா அபியான் என்ற திட்டமாக 2018ல் மாற்றப்பட்டது. அதன்பின், மத்திய, மாநில கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து பேசி, கல்வி திட்டத்தில் புதிதாக சேர்க்க வேண்டிய விஷயங்களை பேசுவர்.
அதில் ஏற்புடையவற்றுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதலுடன், 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் பங்கிட்டு வந்தன. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்துக்கு வர வேண்டிய தொகை, 2,151 கோடி ரூபாயை நிறுத்தி விட்டனர்.
இது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சரை, அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான நிதியை பெற, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டியது கட்டாயம்.
அதன்படி, நீங்கள் மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டியது அவசியம். அதற்கான ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டால், அடுத்த அரை மணி நேரத்தில், உங்களுக்கான பணத்தை ஒதுக்குகிறேன் என்றார்.
அந்த நிதி வராததால், 40 லட்சம் மாணவ - மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் உள்ளிட்ட 32,000 பேருக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் 12,000 பேர், ஒரு லட்சம் சிறப்பு குழந்தைகள், அவர்களுக்கான சிறப்பாசிரியர்கள், ஆதரவற்ற குழந்தைகள் என, 40 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆர்.டி.இ., குழந்தைகளுக்கு மட்டுமே, 300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒதுக்காதது, தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து, துணை முதல்வருடன் ஆலோசித்துள்ளோம். அடுத்து முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிய பின், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.