சிறுபான்மையினர் என்று யாருமில்லை: கல்லுாரி மாநாட்டில் கவர்னர் பேச்சு
சிறுபான்மையினர் என்று யாருமில்லை: கல்லுாரி மாநாட்டில் கவர்னர் பேச்சு
UPDATED : ஆக 04, 2026 12:44 PM
ADDED : ஆக 04, 2026 12:45 PM
வண்டலுார்:
“இந்தியாவில் சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது; அனைவரும் ஒன்று தான்,” என, வண்டலுார், கிரசண்ட் கல்லுாரியில் நேற்று நடந்த மாநாட்டில், தமிழக கவர்னர் அர்லேக்கர் பேசினார்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து மாநாடு, வண்டலுார் கிரசண்ட் பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பேசியதாவது:
நாம் அனைவரும் ஒன்று தான். அனைவரும் பெரும்பான்மையின் ஒரு பகுதியே. இங்கு சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை.
ஆனால், சிறுபான்மையினர் தொடர்பான பிரச்னைகள் எங்கிருந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை.
ஒரே புவியியல் அமைப்பிற்குள் வாழும் நாம், ஒரே கலாசாரத்தையே பின்பற்றுகிறோம். தோளோடு தோள் நின்று, ஒன்றாகச் சிந்தித்து, ஒன்றாகவே உழைக்கிறோம்.
நாட்டின் 100வது சுதந்திர தினமான 2047ம் ஆண்டிற்குள், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக நாம் பிரகடனப்படுத்த வேண்டும். அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் இணைந்து, நாம் இதை நனவாக்குவோம்.
கல்வி நிறுவனங்கள் என்பது, வேலைக்காரர்களை உருவாக்காமல், தொழில் முனைவோரை, தலைவர்களை உருவாக்க வேண்டும். நம் மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது; அவர்கள் வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும்.
'விக் ஷித் பாரத் - 2047' என்ற இலக்கை நோக்கி, நம் இளைய தலைமுறையும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், கல்லுாரி பதிவாளர் ராஜா ஹூசைன், முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் வழிகாட்டி இந்திரேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
