சத்தர்பூர் பள்ளியில் இனி ஒரே ஷிப்ட்; கல்வி அமைச்சர் அதிஷி சிங் தகவல்
சத்தர்பூர் பள்ளியில் இனி ஒரே ஷிப்ட்; கல்வி அமைச்சர் அதிஷி சிங் தகவல்
UPDATED : ஆக 22, 2024 12:00 AM
ADDED : ஆக 22, 2024 12:23 PM
புதுடில்லி:
மக்களின் ஆசியுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து விரைவில் வந்து சத்தர்பூர் மைதாங் கர்ஹி புதிய பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவார்,என கல்வி அமைச்சர் அதிஷி பேசினார்.
தெற்கு டில்லி சத்தர்பூர் மைதாங் கர்ஹி கிராமத்தில் அரசு இருபாலர் மேல்நிலைப் பள்ளியில் புதிய நான்கு மாடிக் கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது.
கட்டடத்தை திறந்து வைத்த கல்வி அமைச்சர் அதிஷி சிங் பேசியதாவது:
இந்தப் பள்ளியில் மேலும் ஒரு புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் துவங்கும். சர்வதேச தரத்தில் டில்லி குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதே நம் முதல்வரின் நோக்கம்.
கெஜ்ரிவால் விடுதலைக்காக டில்லி பெண்கள் பிரார்த்தனை செய்தனர். பலர் அவருக்காக உண்ணாவிரதம் கூட இருந்தனர். டில்லி மக்களின் ஆசியுடன், முதல்வர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்து, இதே பள்ளியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவார்.
இந்தப் பள்ளியால் மைதாங் கர்ஹி, ராஜ்பூர், சத்தர்பூர், நெப் சராய் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயனடைவர். இந்தக் கட்டடத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதிக மக்கள் தொகை கொண்ட இங்கு சாலை அமைக்க இடத்தைக் கண்டுபிடிப்பது கூட சவாலானது.
அதிக மாணவர் எண்ணிக்கை காரணமாக இந்தப் பள்ளி இரண்டு ஷிப்டுகளாக இயங்கி வந்தது. ஆனால் இந்தப் புதிய கட்டடத்தால் மீண்டும் ஒரே ஷிப்டில் இயங்கும். இந்த புதிய கட்டடத்தில் அதிநவீன ஆய்வகங்கள், நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் பயிற்சிக்கான பட்ஜெட் 10 மடங்கு அதாவது 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் டில்லியில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி வழங்குவதற்காக 38 சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அதிஷி, மேற்கு டில்லி ஜாகிரா ரயில்வே சுரங்கப் பாதை அருகே மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ரயில்வே நிலத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு சரியாக இல்லை. இரண்டு ஆண்டுகளாக ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் டில்லி அரசு தன் பங்களிப்பை கொடுத்தும் கூட இதுவரை எந்தப் பணியும் செய்யவில்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன், என்றார்.