இனி பயிற்சியாளர் தேவையில்லை வந்துவிட்டது ஏ.ஐ., யோகா மேட்
இனி பயிற்சியாளர் தேவையில்லை வந்துவிட்டது ஏ.ஐ., யோகா மேட்
UPDATED : ஜூன் 25, 2024 12:00 AM
ADDED : ஜூன் 25, 2024 06:39 AM

புதுடில்லி :
யோகாசன பயிற்சிகள் மேற்கொள்வதற்கு சிலருக்கு நேரமிருந்தாலும், தகுந்த பயிற்சியாளர் கிடைப்பது சிரமமாக இருக்கும். இது போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய யோகா மேட்.
ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் ஆதரவுடன் இயங்கும், வெல்னெஸ் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
இந்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இயங்கும் யோகா மேட்டை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடம் நேற்று வழங்கப்பட்டது.
இது குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளதாவது:
இந்த யோகா மேட் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, நம் மொபைல் போன் போன்றவற்றுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
இந்த மேட்டில் உள்ள சென்சார்கள், பயனாளிகள் செய்யும் யோகா பயிற்சியின் அடிப்படையில், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும். எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் கற்று தரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.