UPDATED : மே 29, 2025 12:00 AM
ADDED : மே 29, 2025 10:55 AM

கோவை:
பாரதியார் பல்கலையில், 2006ம் ஆண்டு இலவச கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததால், 2017ல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையடுத்து, 2022- 23ம் கல்வியாண்டில் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு கல்லுாரியில், துறைக்கு மூன்று பேர் வீதம், 15 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதன் மூலம் பல்கலையின் கீழ், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளில், 1,500 ஏழை மாணவர்கள் வரை, இலவச கல்வி பெற வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், முக்கிய பதவிகள் காலியாகவுள்ளதால், பொறுப்பு வகித்த அதிகாரிகள் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவுறுத்தலை, ஏப்., மாதத்திலேயே கல்லுாரிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். நடப்பாண்டில், முதலாமாண்டு சேர்க்கை துவங்கவுள்ளது. இதுவரை இலவச கல்வி செயல்படுத்துவது குறித்து, கல்லுாரிகளுக்கு தகவல்கள் அளிக்கப்படவில்லை.
கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும், மாணவர்கள் இலவச கல்வி திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்கலையின் அறிவிப்பு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார்.
பல்கலை பதிவாளர் ரூபா கூறுகையில், கல்லுாரிகளுக்கு இலவச கல்வித்திட்டம் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கவுள்ளோம். இத்திட்டம் கட்டாயம் முன்னெடுக்கப்படும். மாணவர்கள் பயனடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

