போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்குவது தான் உண்மையான தோல்வி!
போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்குவது தான் உண்மையான தோல்வி!
UPDATED : செப் 14, 2026 12:47 PM
ADDED : செப் 14, 2026 12:51 PM
மேட்டுப்பாளையம்:
களத்தில் தோற்பது தோல்வி அல்ல. போட்டியில் பங்கேற்காமல் பின்வாங்குவது உண்மையான தோல்வி என்று, மாணவ, மாணவியருக்கு, விளையாட்டு விழாவில் தன்னம்பிக்கை அளிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது.
கோவை என்.சி.சி., தலைமை அலுவவர் லெப்டினன்ட் கர்னல் பிரவீன் பேசியதாவது:
உடல் உழைப்பும், உடல் இயக்கமும் இன்றி, மனிதனால் தன் அடிப்படை ஆரோக்கியத்தை கூட பேண முடியாது.
விளையாட்டு என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல. குழுப்பணி, தலைமைப் பண்பு, சுய ஒழுக்கம், பொறுமை மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றை விளையாட்டைப் போல ஆழமாக கற்றுத்தர வேறு எந்தச் செயல்பாட்டாலும் இயலாது.
எந்த மலையும் ஏறி விட முடியாத அளவுக்கு செங்குத்தானது அல்ல என்ற, சுய நம்பிக்கையும், சக வீரர்கள் மீதான நம்பிக்கையும், மாணவர்களுக்கு மிக அவசியம்.
களத்தில் தோற்பது தோல்வி அல்ல. போட்டிகளில் பங்கேற்காமல் பின்வாங்குவது உண்மையான தோல்வி. முயற்சியை கைவிடுதல் என்ற சொல்லே மாணவர்களின் அகராதியில் இருக்கக் கூடாது.
மைதானத்தின் ஆட்டம் இன்று முடிவடையலாம். ஆனால் வாழ்க்கை என்னும் விளையாட்டு முடிவற்றது. வெற்றி பெறும் வரை, அயராது போராடும் எண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
வெற்றியின் போது பணிவையும், வீழ்ச்சியின் போது மீண்டும் துணிந்து எழும்பும் மனப்பக்குவத்தையும், விளையாட்டு மட்டுமே தரும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் மாணவர்கள் பிரியங்கா, ரகுராம் ஆகியோர் பேசினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குனர் தேவராஜன் பங்கேற்றார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார். பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர் ஷீலா கிரேஸ், உடற்கல்வித்துறை துணை இயக்குனர் அனிதா மற்றும் உடற்கல்வித்துறை ஆசிரியர்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தடகளம், விளையாட்டு மற்றும் பல்வேறு பிரிவு போட்டிகளில் அதிக வெற்றி புள்ளிகளை எடுத்த, பிருத்வி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.
10,008
பள்ளியின் செயலர் கவிதாசன் பேசுகையில், ''நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு பூமியை, நல்ல நிலையில் அடுத்த தலைமுறைக்கு விட வேண்டும். மியாவாக்கி முறையில், 1,008 மரக்கன்றுகளை பள்ளி அருகே ஒரே நேரத்தில் மாணவ, மாணவியர் நட்டுள்ளனர். அடுத்ததாக, பத்தாயிரத்து எட்டு மரக்கன்றுகளை ஒரே நாளில், மாணவர்கள், பெற்றோருடன் இணைந்து நட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
