பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதியை தராமல் : 'இழுத்தடிக்கிறாங்க...'
பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதியை தராமல் : 'இழுத்தடிக்கிறாங்க...'
UPDATED : நவ 04, 2025 08:05 AM
ADDED : நவ 04, 2025 08:06 AM

 மதுரை: 
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இரு பெண் குழந்தைகள் எனில் தலா ரூ.25 ஆயிரமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற தாயின் வயது 20 முதல் 40க்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் செய்திருக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று இணைக்க வேண்டும்.
ரூ.50 ஆயிரம் நிதி மனுவை ஒன்றிய அளவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் பரிசீலித்து தொகை வழங்க பரிந்துரைப்பார். தகுதியுள்ள குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான பத்திரத்தின் நகலை பெற்றோருக்கு அரசு அனுப்பி வைக்கும். அத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும். பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானதும் அத்தொகை கிடைக்கும்.
மதுரை மாவட்டத்தில் இந்த உதவித்தொகை பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். பலர் பயன்பெற்ற நிலையில், சில நுாறு பேர் இப்பலனை பெற முடியாமல் தவிப்பில் உள்ளனர். 18 வயதை தாண்டியதும் நிதி உதவியை பெற, அப்பெண் குழந்தையின் பிறப்புச் சான்று, வங்கி கணக்கு, அரசு வழங்கிய பத்திர நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பித்த பலரது பத்திர நகலில் பெண் குழந்தையின் பெயரில் எழுத்துப்பிழைகள் உட்பட குறைபாடுகள் உள்ளோருக்கு நிதிஉதவி மறுக்கப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கூறுகையில், 'விண்ணப்பித்த சில மாதங்களில் உதவித்தொகையின் பத்திர நகலை அனுப்பி விடுகின்றனர். முதிர்வு காலமான 18 வயது பூர்த்தியாகும்போது சிறுசிறு பிழையால் நிதி மறுக்கப்படுகிறது. பெயரை கெஜட்டில் பெயரை மாற்றி சரிசெய்து சான்றுடன் மீண்டும் விண்ணப்பிக்கிறோம். அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்குமாறு அலைக்கழிக்கின்றனர். இதனால் பெண் குழந்தைக்கு 24 வயதான பின்னும் நிதிஉதவி பெற இயலாமல் தவிக்கிறோம்.'' என்றனர்.
நிலுவையில் 600 மனுக்கள் சமூகநலத் துறையில் விசாரித்தபோது, ''எழுத்துப் பிழை உட்பட சிறுசிறு குறைபாடுகளால் நிதி பெறாதவர்கள் அவற்றை சரிசெய்து விண்ணப்பிக்கின்றனர். அம்மனுக்களை சென்னைக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கு தாமதமாகிறது. மதுரை மாவட்டத்தில் இவ்வகையில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன'' என்றனர்.

