கட்டணம் உயர்த்திய பள்ளிகளுக்கு நோட்டீஸ்; முதல்வர் ரேகா குப்தா தகவல்
கட்டணம் உயர்த்திய பள்ளிகளுக்கு நோட்டீஸ்; முதல்வர் ரேகா குப்தா தகவல்
UPDATED : ஏப் 18, 2025 12:00 AM
ADDED : ஏப் 18, 2025 12:57 PM
புதுடில்லி:
தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்திய தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
டில்லியில் தனியார் பள்ளிகள் முன்னறிவிப்பு இல்லாமல் கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆளும் பா.ஜ., அரசு இந்தக் கட்டண உயர்வை கண்டுகொள்ளவில்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. மேலும், பல தனியார் பள்ளிகள் முன், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், கட்டணம் உயர்த்திய பள்ளிகள் மீது புகார் செய்யலாம் என அதற்கான 'இ - மெயில்' முகவரியை அறிவித்தார்.
இந்நிலையில், நடந்த ஜன் சம்வாத் என்ற பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாமில், முதல்வர் ரேகா குப்தாவிடம் கல்விக் கட்டண உயர்வு குறித்து பலர் மனு கொடுத்தனர்.
அதன்பின், முதல்வர் ரேகா நிருபர்களிடம் கூறியதாவது:
மாடல் டவுனில் உள்ள குயின் மேரி பள்ளியில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து பலர் மனு கொடுத்துள்ளனர். மேலும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த மறுத்தால் மாணவர்களை வெளியேற்றுவதாகவும் புகாரில் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கல்விக் கட்டணம் தொடர்பாக பெற்றோரை துன்புறுத்தவோ அல்லது மாணவர்களை நீக்கவோ எந்தப் பள்ளிக்கும் உரிமை இல்லை.
அனைத்துப் பள்ளிகளும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு குழந்தையும் நீதி, கண்ணியம் மற்றும் தரமான கல்வியைப் பெறத் தகுதியானவர்.
கல்வியில் வெளிப்படைத்தன்மை, சம வாய்ப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் டில்லி அரசு உறுதியாக உள்ளது.
தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்திய பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளன. அந்தப் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகள் விளக்கம் அளித்தவுடன் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.