நர்சிங் கல்லுாரிகள், நிறுவனங்கள் விபரம் பதிவேற்றம் செய்ய உத்தரவு
நர்சிங் கல்லுாரிகள், நிறுவனங்கள் விபரம் பதிவேற்றம் செய்ய உத்தரவு
UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 11:48 AM
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள நர்சிங் கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக சுகாதாரம், குடும்ப நலத்துறை முதன்மை செயலர், 2024 நவம்பர் 5ல், கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதில், கலெக்டர்கள் தங்கள் அதிகார வரம்புக்கு உட்பட்ட நர்சிங் கல்லுாரிகளுக்கு சென்று, அடிப்படை வசதிகள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், கர்நாடக தனியார் சுகாதார நிறுவனங்கள் மேலாண்மை சங்கம், மாநில செவிலியர் மற்றும் பிற சுகாதார நிறுவனங்கள் மேலாண்மை சங்கத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீது, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன் விசாரணை நடந்தது. விசாரணையின் போது, மனுதாரர் வக்கீல் வாதிடுகையில், மாவட்ட கலெக்டருக்கு இவ்விஷயத்தில் தலையிட அதிகாரம் இல்லை, அனுபவமும் இல்லை' என்றார்.
நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் கூறியதாவது:
தற்போதைய சூழ்நிலையில், எந்த நர்சிங் கல்லுாரியில் சேர வேண்டும்; அங்கு அவர்களுக்கு சீட் கிடைக்குமா என்ற தகவல் கிடைப்பதில்லை.
அனைத்து நர்சிங் கல்லுாரிகள் அல்லது நிறுவனங்கள் பற்றிய தகவல்களை, இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஐ.என்.சி., எனும் இந்திய நர்சிங் கவுன்சில், கே.என்.சி., கர்நாடக நர்சிங் கவுன்சில், ராஜிவ்காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை ஒன்றாக ஆலோசனை செய்து நடவடிக்கை வேண்டும். இதற்கு சுகாதார துறையும் தேவையான தகவல்களை வழங்க வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகத்தின் மறு ஆய்வு குழுவினர், அனைத்து நர்சிங் நிறுவனங்களுக்கும் சென்று, அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள், நிறுவனம் நடத்த தேவையான அனுமதி பெற்றுள்ளனரா என்பதையும் ஆய்வு செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பான சர்ச்சைகள் இருந்தாலும், அந்த விபரத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நர்சிங் நிறுவனங்களுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது விரிவுரையாளர்கள் புகார்கள் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். அந்த புகார்களையும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.