UPDATED : ஏப் 17, 2025 12:00 AM
ADDED : ஏப் 17, 2025 12:08 PM
சென்னை:
அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியத்தை வலியுறுத்தி, வரும், 24ம் தேதி, சமூக நலத்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் மாயமலை அளித்த பேட்டி:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, மாதம், 2,000 ரூபாய் சிறப்பு ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. அது, அகவிலைப்படியுடன் சேர்ந்து, 6,750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இதுவரை, அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, கொரோனா நிவாரண நிதி கேட்ட போது, 11 லட்சம் ரூபாயும், மிக்ஜாம் புயலின் போது, 80 லட்சம் ரூபாயும் வழங்கினோம். எங்களின் கோரிக்கையான மருத்துவ காப்பீடு மற்றும் ஈமச்சடங்கிற்கு, 25,000 ரூபாய் உள்ளிட்டவற்றை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
இதைக் கண்டித்து, வரும், 24ம் தேதி, சென்னையில் உள்ள சமூக நலத்துறையின் இயக்குநரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.