UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 08:09 AM

சென்னை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் குறித்து, சங்கத் தலைவர் கலா கூறியதாவது:
சத்துணவுத் துறையில் உள்ள, 63,000க்கும் மேற்பட்ட காலிப்பணி இடங்களை நிரப்புவது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்றாமல், அரசு, மெத்தனம் காட்டி வருவது வேதனையாக உள்ளது. அரசின் இந்த போக்கை கண்டிக்கும் வகையில், 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளோம்.
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஒரு குழு அமைக்கப்படும். அதன் வாயிலாக அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆட்சி பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
அதேநேரம், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை, தொகுப்பு ஊதியத்தில் நிரப்ப, அரசு ஆணையிட்டுள்ளது, இது எங்களின் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு எதிரானது. காலமுறை ஊதியம்; குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 9,000 ரூபாய்; பணிக்கொடையாக அமைப்பாளருக்கு ஐந்து லட்சம் ரூபாய்; சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாய் என்ற கோரிக்கை எதையும் அரசு நிறைவேற்றவில்லை. இவற்றை நிறைவேற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.