UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:49 AM

திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார் வட்டார அளவிலான தனியார் பள்ளி வாகனங்களை, மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகன ஆய்வு குழுவினர் சோதனை செய்தனர்.
திருக்கோவிலூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதற்கான முகாம் சந்தைப்பேட்டையில் உள்ள வித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் நடந்தது. ஆய்விற்கு 60 பள்ளி வாகனங்கள் வந்திருந்தது.
இதனை மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகன ஆய்வு குழுவை சேர்ந்த ஆர்.டி.ஓ., கண்ணன், டி.எஸ்.பி., மனோஜ் குமார், வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயபாஸ்கரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் உள்ளடக்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் 8 வாகனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் அதனை சரிசெய்து மறு ஆய்வுக்கு வரும் வரை பொது சாலையில் இயக்க அனுமதி மறுத்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குவது குறித்து பயிற்சி அளித்தனர்.