உரிய கட்டமைப்பு இன்றி இயங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
உரிய கட்டமைப்பு இன்றி இயங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 21, 2025 12:00 AM
ADDED : ஜூன் 21, 2025 09:56 AM
 புதுச்சேரி : 
புதுச்சேரியில் உரிய கட்டமைப்பு இன்றி இயங்கும் தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென,அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறந்து, 20 நாட்கள் கடந்துள்ளன.மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், பாடப் புத்தகங்கள் பல வகுப்புகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. கல்வித் துறை அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு சீருடைகள், இதுவரை வழங்கப்படவில்லை. சில அதிகாரிகளின் அலட்சியத்தால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும்.100க்கும் மேற்பட்ட சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல அரசு பள்ளிகளில் பாடம் கற்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
சில தனியார் பள்ளிகள் உரிய கட்டமைப்பு இல்லாமல் இயங்கி வருவதாக தெரிகிறது. அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
100 சதவீத தேர்ச்சிக்காக கட்டாய மாற்று சான்றிதழ் வழங்கும் தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து, அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.அரசு பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர் நலன் சார்ந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

