UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 08:59 AM
சென்னை:
பேருந்தின் கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டு, பயணியரை அச்சுறுத்திய கல்லுாரி மாணவர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, திரு.வி.க., நகர் நோக்கி பயணியருடன், நேற்று முன்தினம் மாலை மாநகர பேருந்து ஒன்று சென்றது. இதில் பயணித்த கல்லுாரி மாணவர்கள் பலர் படிக்கட்டில் தொங்கியும், அதிக சத்தமிட்டபடியும் பயணித்தனர்.
இது, பேருந்தில் இருந்த பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள், பேருந்தின் கூரை மீது ஏறியும் ரகளையில் ஈடுபட்டனர். ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர் அவர்களை கண்டித்தனர். சென்ட்ரல் அருகே பேருந்து வந்த போது, பாலத்தில் வண்டியை நிறுத்தும்படி கூறி, மாணவர்கள் ஓட்டுனரை மிரட்டினர். அவர் பேருந்தை நிறுத்தியதும், மாணவர்கள் இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து, திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று, ரகளையில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தேடிவருகின்றனர்.