UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM
ADDED : ஜூன் 27, 2025 07:14 PM

சென்னை:
பள்ளிக்கல்வித் துறையின் ஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, ஒரு லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு, 'எமிஸ்' இணையதளம் வாயிலாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டங்களுக்குள் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் கோரி, ஒரு லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல், வரும் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வருவாய் மாவட்டத்திற்குள்ளான மாறுதல், ஜூலை 1, மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 2, முதுநிலை, கணினி, உடற்கல்வி, தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள்ளான மாறுதல் ஜூலை 3, மாவட்டங்களுக்கு இடையிலான மாறுதல் ஜூலை 4 முதல் 8ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், இடமாறுதல் கலந்தாய்வின் போது, முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, பதவி உயர்வு இல்லாமல், ஏற்கனவே தலைமை ஆசிரியர்களாக உள்ளோருக்கு மட்டும் இடமாறுதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள 300 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை ஏற்படும். பதவி உயர்வு இல்லாததால், 2,000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். எனவே, தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என, முதுநிலை ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.