விடைத்தாள் தைக்கும் பணிக்கு ஒரே மையம் தலைமையாசிரியர்கள் நிம்மதி
விடைத்தாள் தைக்கும் பணிக்கு ஒரே மையம் தலைமையாசிரியர்கள் நிம்மதி
UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 11:21 AM
பொள்ளாச்சி:
மாவட்டந்தோறும், ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டு டாப் ஷீட்டுடன் விடைத்தாள் இணைத்தும் தைக்கும் பணியால், தலைமையாசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடக்கிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், இத்தேர்வுகளை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்த தேர்வுக்கு, டாப் ஷீட்டுடன் விடைத்தாள் இணைத்து தைக்கும் பணி, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில், தேர்வு மையங்களில், விடைத்தாள் தைக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, மாவட்டந்தோறும், ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், தேர்வு மையங்களில், முதன்மை கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் தலைமையாசிரியர்கள் ஆசுவாசம் அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
வழக்கமாக, தேர்வு மையங்களில், டாப் ஷீட்டுடன் விடைத்தாள் இணைத்து தைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதற்காக டெய்லர் ஒருவரை நியமித்து, ஒரு ஷீட்டுக்கு, ஒரு ரூபாய் என, தொகை அளிக்கப்படும்.
இந்த தொகைக்கு ஆட்கள் வராத காரணத்தால், தலைமையாசிரியர்கள் கூடுதலாக அவரவர் சொந்தப் பணத்தை அவர்களுக்கு வழங்கினர். இதனை, ஆசிரியர்கள் கண்காணித்து, சரிபார்த்து வைப்பார். தற்போது, அந்த நடைமுறை மாறியுள்ளதால் நிம்மதி கிடைத்துள்ளது.
தற்போது, 38 வருவாய் மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட தலைமையகங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தமட்டில், கிக்கானி பள்ளியில் விடைத்தாள் தைக்கும் மையம் அமைக்கப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
அங்கு, 18 தையல் இயந்திரங்களில், டெய்லர்கள் வாயிலாக இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்தந்த தேர்வு மையங்களுக்கு உட்பட்ட விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அங்கு சென்று, அதனை சரிபார்த்து, வாகனங்களில் எடுத்து வருவர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.