தேர்வு முடிந்து ஓராண்டானது முடிவு தெரியாததால் அதிருப்தி
தேர்வு முடிந்து ஓராண்டானது முடிவு தெரியாததால் அதிருப்தி
UPDATED : செப் 21, 2026 05:33 PM
ADDED : செப் 21, 2026 05:41 PM
அன்னுார்:
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு முடிந்து ஓராண்டாகியும், பணி நியமனம் செய்யப்படவில்லை.
அன்னுார் தாலுகாவில், அன்னுார் தெற்கு, வடக்கு, எஸ்.எஸ்.குளம் என மூன்று உள்வட்டங்கள் உள்ளன. 30 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், பத்து வருவாய் கிராமங்களில், இரு ஆண்டுகளாக கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஏழு பணியிடங்களுக்கு மட்டும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் எழுத்து தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. பின், வயது வரம்பு தளர்த்தப்பட்டு, செப்டம்பரில் மீண்டும் எழுத்து தேர்வு, வாசிப்பு தேர்வு நடந்தது. ஓராண்டு கடந்தும், தேர்வு முடிவு இது வரை வெளியாகவில்லை.
விண்ணப்பதாரர்கள் சிலர் கூறுகையில், “அன்னூர் தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருந்தும், நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எழுத்து தேர்வு, வாசிப்பு தேர்வு ஆகியவற்றில் பங்கேற்றோம். இருசக்கர வாகனம் ஓட்டும் லைசென்ஸ் இல்லாதவர்கள் சைக்கிள் ஓட்டிக் காண்பித்தோம். ஓராண்டு ஆகிவிட்டது.
இது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை. காலியான கிராம உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தேர்வு முடிவுகளை அரசு வெளியிட வேண்டும். காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,” என்றனர்.
