பணியிட மாறுதலுக்கு ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை துவக்கம்; திராவிட மாடல் லஞ்சத்துக்கு வேட்டு
பணியிட மாறுதலுக்கு ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை துவக்கம்; திராவிட மாடல் லஞ்சத்துக்கு வேட்டு
UPDATED : ஜூன் 23, 2026 07:50 PM
ADDED : ஜூன் 23, 2026 07:53 PM
சென்னை:
மாநகராட்சிகள், நகராட்சிகளில் இனி 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடமாறுதலுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் வாயிலாக விண்ணப்பித்து வந்தனர். அந்த நடைமுறையில், பலர் இடைத்தரகர் வாயிலாக, லட்சக்கணக்கான ரூபாய் அளித்து இடமாறுதல் பெற்று வந்தனர்.
இதனால், நகராட்சி நிர்வாக அலுவலகத்தில், எப்போதும் இடைத்தரகர் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவர்களை ஒழிக்கும் வகையிலும், பணியிட மாறுதலை எளிதாக்கும் வகையிலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறையை, நகராட்சி நிர்வாகத் துறை கொண்டு வந்துள்ளது.
அனுமதி
அதன்படி, cma.tncma@nic.in என்ற மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதற்கான பிரத்யேக படிவமும், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல், அதிகாரிகள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விபரம் குறித்தும், மாநகராட்சிகள், நகராட்சிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணியிட மாறுதல் வெளிப்படைதன்மையுடன், நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். எனவே, நேரடி விண்ணப்பத்திற்கு பதிலாக, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவசியம்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள், தற்போது பணியாற்றி வரும் இடத்தில் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் பணியாற்றுகின்றனர் போன்ற விபரம் கட்டாயம் அளிக்க வேண்டும். அதே போல், பணியாளர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை, குற்றச்சாட்டு, விசாரணை நிலுவையில் இருக்கிறதா என்பதையும் தெரியப்படுத்துவது அவசியம்.
இதில், பணியிட மாறுதல் கேட்போர், மூன்று இடங்களை குறிப்பிடுவது முக்கியம். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாறுதல் கேட்டால், அதற்கான ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
