618 அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
618 அங்கன்வாடி ஊழியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : நவ 24, 2025 08:26 AM
ADDED : நவ 24, 2025 08:27 AM
புதுச்சேரி:
மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் 618 அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
மத்திய அரசின் சாக் ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ், அடிப்படை கவுரவ ஊதியத்தில் 344 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர்கள் (பெண்கள் மட்டும்) என, மொத்தம் 618 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு விண்ணப்பிக்க புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். பின், தேர்வு குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏற்கனவே கூகுள் படிவங்கள் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் துறை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பணிக்கு 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எந்தவொரு பிரிவுக்கும் வயது தளர்வு கிடையாது.
விண்ணப்பத்தாரர்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 22ம் தேதி மாலை 5:00 மணி வரை இணையதளம் மூலம் https://wcd.py.gov.in அல்லது https://www.py.gov.in மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

