முறையாக நடக்காத ஆன்லைன் பணி மாறுதல் கவுன்சிலிங் : செவிலியர்கள் குமுறல்
முறையாக நடக்காத ஆன்லைன் பணி மாறுதல் கவுன்சிலிங் : செவிலியர்கள் குமுறல்
UPDATED : மே 23, 2025 12:00 AM
ADDED : மே 23, 2025 11:19 AM

சிவகங்கை:
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ஆன்லைன் மூலம் பணி மாறுதல் கவுன்சிலிங் முறையாக நடத்தப்படவில்லை என சிவகங்கையில் கவுன்சிலிங்கில் பங்கேற்ற செவிலியர்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணிமாறுதல் கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடந்தது. இந்த கவுன்சிலிங்கில் அனைத்து காலிப்பணியிடங்களும் காண்பிக்கப்படவில்லை எனவும் ஒரு சில காலி பணியிடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும், பணிமூப்பு குறைவாக உள்ள செவிலியர்களுக்கு முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் செவிலியர்கள் குற்றம்சாட்டினர்.
கவுன்சிலிங் பட்டியலில் பணி மூப்பு அதிகம் உள்ள செவிலியர்களின் பெயர்கள் பட்டியலில் இறுதியிலும், பணிமூப்பு குறைவாக உள்ள செவிலியர்கள் பெயர்கள் பட்டியலில் முன்னதாகவும் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
கவுன்சிலிங்கில் பங்கேற்ற செவிலியர்கள் கூறியதாவது:
சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடந்த கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து 70 பேர் கலந்து கொண்டோம். இந்த கவுன்சிலிங் காலை 11:00 மணிக்கு துவங்க வேண்டியது. மதியம் 2:00 மணிக்கு தான் துவங்கியது. தென் மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை கவுன்சிலிங்கில் காட்டாமல் இருந்தார்கள்.
தற்போது தான் மதுரை மாவட்ட மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை காட்டினர். அதிலும் சீனியாரிட்டி அடிப்படையில் எங்களால் அந்த இடத்தை தேர்வு செய்ய முடியவில்லை. தேர்வு செய்வதற்கு எங்களது பெயர்கள் பட்டியலில் முறையாக சீனியாரிட்டிபடி இல்லை. எங்களை விட குறைவாக சீனியாரிட்டி உள்ள பெயர்கள் பட்டியலில் இருந்தது. அவர்கள் அந்த இடத்தை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த ஆன்லைன் கவுன்சிலிங் முறைப்படி நடத்தவில்லை என்றனர்.