UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 03:46 PM
சென்னை:
இந்திய வானிலை துறை துவங்கப்பட்டதன் 150ம் ஆண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் வெளியிட்ட அறிக்கை:
இந்திய வானிலை துறையின் 150வது ஆண்டு விழா, 2025 ஜனவரி 15ல் கொண்டாடப்படுகிறது. அன்று டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரமாண்டமான விழா நடக்க உள்ளது.
இதையொட்டி, வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாடுகள், பொது மக்களுக்கான சேவைகள் ஆகியவற்றை விளக்கும் வகையில், மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தேசிய அளவில் வானிலை ஒலிம்பியாட் போட்டிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, எட்டு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய, மாநில அளவில், ஆன்லைனில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இவற்றில் பங்கேற்க விரும்புவோர், https://mausam.imd.gov.in/met-oly/ என்ற இணையதளம் வாயிலாக, டிச., 10 இரவு 11:59 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மாநில அளவிலான போட்டிகள், டிச., 14, 15ம் தேதிகளில் நடக்கும். இதன் முடிவுகள், டிச., 17ல் அறிவிக்கப்படும்.
தேசிய அளவிலான போட்டிகள், ஜனவரி 14ல் நடக்கும் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, ஜனவரி 15ல் நடக்கும் 150வது ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு, 94980 02635, 044 - 28246034 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.