UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 11:11 AM

கோவை:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியானது. பெரும்பாலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறையைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது, எதைத் தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு இருக்கும் என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். இந்நிலையில், மருத்துவம், பொறியியல் மட்டுமல்ல குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்து, கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியதாவது:
பிளஸ் 2 தோல்வியடைந்த மாணவர்கள் துவண்டுபோகக் கூடாது. துணைத் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறலாம். பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பிளஸ் 2க்கு பிறகு 80 நுழைவுத் தேர்வுகள் அரசு சார்பில் நடத்தப்படுகின்றன. இதில், 75 நுழைவுத் தேர்வுகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்களைப் பார்ப்பதில்லை. நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நிறைய நுழைவுத் தேர்வுகளை எழுத மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு கல்லுாரியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். அரசு சார்பில் நடத்தப்படும் கல்லுாரிக் கனவு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் துறைகளில் வெளிநாடுகளில் மேல்படிப்பு, பணிக்கு வாய்ப்பு உள்ளதா போன்றவை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதுதொடரபுபான தொழில்நுட்பம் குறித்த தங்களது அறிவை மேம்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் ஜொலிக்கலாம். பொறியியல், மருத்துவம் தாண்டி எண்ணற்ற துறைகள் உள்ளன.
மெட்டலஜி, எர்த் சைன்ஸ் போன்ற துறைகளை குறைந்த மாணவர்களே தேர்ந்தெடுக்கின்றனர். லட்சங்களில் போட்டியிடுவதைவிட ஆயிரங்களில் போட்டியிட்டு சிறப்பான இடங்களைப் பிடிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.