UPDATED : ஜூன் 24, 2024 12:00 AM
ADDED : ஜூன் 24, 2024 06:19 AM

சென்னை:
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு, இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு, அரசு ஒதுக்கீட்டில், 960 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 540 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட பி.என்.ஒய்.எஸ்., என்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு நாளை முதல், https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துணை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ வளாகம், அரும்பாக்கம் - 600 106 என்ற முகவரிக்கு, ஜூலை 8, மாலை 5:30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.