UPDATED : ஜன 02, 2025 12:00 AM
ADDED : ஜன 02, 2025 12:41 PM
திருப்பூர்:
மத்திய அரசின் புதிய தொழில்நுட்பங்களை, புதிய தொழிலாக மாற்றும் முயற்சியாக, லகு உத்யோக் பாரதி சார்பில், தொழில்நெறி வழிகாட்டு கருத்தரங்கு நாளை திருப்பூரில் நடக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் இயங்கும், அறிவியல் தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.,), புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து, அதன் வாயிலாக தொழிலை மேம்படுத்த வழிகாட்டும் அமைப்பாக இயங்கி வருகிறது.
அதாவது, ஐ.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப மையங்கள் மூலமாக, புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படுகிறது. பயனுள்ள தொழில்நுட்பங்களை பகுப்பாய்வு செய்து, உறுதி செய்த பின், அவற்றை தொழில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பயன்படுத்த வழங்கப்படுகிறது.
அதன்படி, 50க்கும் அதிகமான தொழில்நுட்பங்கள், தொழில்களை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் புதிய யோசனைகள் தொழிலாக உருமாற்றம் செய்யும் வாய்ப்பை, லகு உத்யோக் பாரதி அமைப்பு உருவாக்கி கொடுக்கிறது.
தொழில்துறையினரை அழைத்து சென்று, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., மையத்தில் விரிவான தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தியது. அதன் வாயிலாக, ஏராளமான தொழில்முனைவோர், தங்களது பயணத்தை துவக்க இருக்கின்றனர்.
சி.எஸ்.ஐ.ஆர்., மற்றும் சிட்பி வங்கி சார்பில், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு புதிய தொழில் துவங்குவதற்கான வழிகாட்டுதலை வழங்கும் கருத்தரங்கு நடத்த, லகு உத்யோக் பாரதி ஏற்பாடு செய்துள்ளது.
சிட்பி வங்கி வாயிலாக, புதிய தொழில்துவங்கும் கடன் திட்டங்களை வழங்கி, தொழில்முனைவோர்களை உருவாக்க, லகு உத்யோக்பாரதி களமிறங்கியுள்ளது. அதற்காக, திருப்பூர் சைமா அலுவலக கூட்டரங்கில், நாளை (3ம் தேதி) மாலை 5:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, அதற்கான வழிகாட்டி கருத்தரங்கு நடக்க உள்ளது.
அற்புதமான வாய்ப்பு!
இதுகுறித்து லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மத்திய அரசின் புதிய தொழில்நுட்பத்தையும், வங்கி கடன் திட்டங்களையும் பயன்படுத்தி, புதிய தொழில்களை துவக்குவது குறித்து வழிகாட்டுதல் கருத்தரங்கு நடக்க உள்ளது.
லகு உத்யோக் பாரதியின் மாநில இணை பொது செயலாளர் ஜெயேந்திரன், ஈரோடு மாவட்ட தலைவர் இளங்கோ, இணை செயலாளர் லாண்யா, சிட்பி வங்கியின் துணை பொதுமேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர் என்றார்.