கணினி வழியில் செட் தேர்வு முதுநிலை பட்டதாரிகள் எதிர்ப்பு
கணினி வழியில் செட் தேர்வு முதுநிலை பட்டதாரிகள் எதிர்ப்பு
UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 09:47 AM

சென்னை:
தமிழக அரசின் உதவி பேராசிரியர் தகுதி தேர்வு ஏற்பாடுகளில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால் அதை ஓ.எம்.ஆர்., தாள் தேர்வாக மாற்ற வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுதும் உள்ள முதுநிலை பட்டதாரிகள் கல்லுாரி உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கு பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும். பிஎச்.டி., இல்லாதவர்கள் நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெட் என்ற தேசிய தகுதி தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. செட் என்ற தகுதி தேர்வை மாநில அரசுகள் நடத்துகின்றன.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான செட் தேர்வு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை சார்பில் இம்மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடப்பதாக இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்பட்டுள்ளன. இத்தேர்வை தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் கணினி தேர்வாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.
இந்த மாத துவக்கத்தில் மாதிரி தேர்வுகள் நடத்தி பார்க்கப்பட்டன. இதில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் செட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பேராசிரியர்கள் அமைப்பான நெட், செட் சங்கத்தின் பொதுச்செயலர் தங்க முனியாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு நடத்தும் செட் தேர்வுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அதை கணினி வழி தேர்வாக நடத்த சாத்தியக்கூறுகள் இல்லை. இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. எனவே, மத்திய அரசின் யு.ஜி.சி., நடத்துவது போன்று, எழுத்து வடிவில் ஓ.எம்.ஆர்., தாளில் நடத்துவதே சரியாக இருக்கும்.
மேலும் தேர்வுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பாட வாரியாக தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

