அரசு பள்ளியில் ஆக்சிஜன் தோட்டம் கவனிக்க மாணவர் குழு அமைப்பு
அரசு பள்ளியில் ஆக்சிஜன் தோட்டம் கவனிக்க மாணவர் குழு அமைப்பு
UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 09:01 AM

கோபி:
பள்ளியில் உருவாக்கியுள்ள, ஆக்சிஜன் தோட்டத்துக்கு உயிரோட்டம் கொடுக்க, கோபி அருகே அரசு பள்ளி புதுமுயற்சி மேற்கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பொம்மநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில், 90 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை வெங்கடேஷ்வரி தலைமையில், ஆறு ஆசிரியர்கள் போதிக்கின்றனர்.
ஆசிரியர் சித்தேஸ்வரமூர்த்தி, பள்ளி வளாகத்தில், 1,000 சதுர அடியில், ஆக்சிஜன் தோட்டம் என்ற தோட்டம், மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம் என மூன்றையும் தன் சொந்த செலவில் உருவாக்கியுள்ளார்.
அந்த தோட்டங்களை தினமும் மாணவ, மாணவியர் பராமரிக்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் சித்தேஸ்வர மூர்த்தி கூறியதாவது:
புவியின் வெப்ப சமநிலையை மேம்படுத்த, ஆக்சிஜன் தோட்டங்கள் அவசியமாகிறது. எங்கள் பள்ளியில், அதிக ஆக்சிஜன் தரக்கூடிய துளசி, நாகதாளி, சோற்று கற்றாழை, மணிப்ளேன்ட், மாமரம், மருதாணி, கல்வாழை உள்ளிட்ட, 15 செடிகளை கொண்டு ஆக்சிஜன் தோட்டம் உருவாக்கியுள்ளோம். கோடை விடுமுறை நாட்களில், தோட்டங்களை பராமரிக்க, 30 மாணவர்களை கொண்டு குழு அமைத்துள்ளோம்.
நான்கு நாட்களுக்கு ஒரு குழு என்ற முறையில், அந்த தோட்டங்களை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த குழுவினர், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சியும், களைச்செடிகளை அகற்றியும் பராமரிப்பர். அந்த குழுவினருடன், நானும் உடன் வந்து பராமரிப்பு பணி மேற்கொள்வேன். இப்பணி பள்ளிகள் மீண்டும் திறக்கும் வரை நடைபெறும்.
இவ்வாறு கூறினார்.