அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை ஆர்வத்துடன் அழைத்து வரும் பெற்றோர்
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை ஆர்வத்துடன் அழைத்து வரும் பெற்றோர்
UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM
ADDED : ஜூலை 13, 2024 10:11 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களில், நடப்பாண்டு குழந்தைகள் சேர்க்கை, ஐந்து முதல் ஆறு எண்ணிக்கையில் இருந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வகையில், மனதளவில் தயார் படுத்துவதற்காக, முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக, இரண்டு முதல், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 106 அங்கன்வாடி மையங்களில், 1,780 குழந்தைகள், தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடி மைங்களில், 1,750 குழந்தைகள் வரை, முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பாடத்தை முழுமையாக கற்றுத்தரப்படுகிறது. குறிப்பாக, வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வு மற்றும் காணும் காட்சிகளையும் விரிவாக அறிய, செயல்முறை கருவிகளுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது.
பள்ளிப் பருவத்துக்கு முன்பே, கல்வியில் நல்ல வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக பெற்றோரும் ஆர்வம் கொள்கின்றனர். தங்களது குழந்தைகள் படிப்புடன், நடைமுறை வாழ்க்கையை தெரிந்து கொள்வர் என்பதால், அங்கன்வாடிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா கூறுகையில், நடப்பாண்டு, ஐந்து முதல் ஆறு குழந்தைகள் வரை, வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக, 15 முதல் 20 குழந்தைகள் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர், என்றனர்.