குடிநீர் இல்லாத அரசு பள்ளி போலீசில் பெற்றோர் புகார்
குடிநீர் இல்லாத அரசு பள்ளி போலீசில் பெற்றோர் புகார்
UPDATED : செப் 06, 2025 12:00 AM
ADDED : செப் 06, 2025 10:33 AM
பெரும்பாக்கம் :
'பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், குடிநீர் வசதி இன்றி மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். குடிநீர் வசதி செய்து தராவிட்டால் போராட்டம் நடத்துவோம்' என, காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு பள்ளியில் அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதியில்லை. பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், பெரும்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம், பள்ளி மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரில், 'பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்துவோம்' என, கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகத்திடம் இன்ஸ்பெக்டர் விசாரித்தார்.
பின், பெரும்பாக்கம் காவல் நிலையம் சார்பில், பள்ளியில் குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தருவதாக, பெற்றோரிடம் அவர் உறுதி அளித்தார்.