பயிற்சிக்கு மூன்று மடங்கு தொகை கூடுதலாக வசூலிப்பதாக பெற்றோர் புகார்
பயிற்சிக்கு மூன்று மடங்கு தொகை கூடுதலாக வசூலிப்பதாக பெற்றோர் புகார்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 09:42 AM
மதுரை:
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குறிப்பிட்ட சில பயிற்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இங்கு பயிற்சி அளிக்கப்படும் அனைத்து விளையாட்டுகளுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடகள, குழு விளையாட்டுகளுக்கு ஆண்டுக்கு மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாட்மின்டன் பயிற்சிக்கு மாதம் ரூ.413, டென்னிஸ் சிந்தடிக் கோர்ட்டில் ரூ.590, களிமண் தரை பயிற்சிக்கு ரூ.354, நீச்சலுக்கு ரூ.885 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளுக்கு இரு மடங்கு, மூன்று மடங்கு தொகையை பயிற்சியாளர்கள் வசூலிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
பாட்மின்டன், டென்னிஸ் பயிற்சிக்கு அனுமதி தந்தால் நாங்களே காக், பால் வாங்கிக் கொள்வோம். கட்டணம் கூடுதல் என்று பயிற்சியாளர்களிடம் சொன்னால் பிள்ளைகளின் பயிற்சி தடைபடும். அரசு பயிற்சியாளர் என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறியதாவது: என்னென்ன பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம் என்பதை அலுவலகம் முன்பாக அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளோம்.
கடந்த ஏப்ரல் முதல் www.sdat.tn.gov.in இணையதளத்தின் மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை வந்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான சரியான கட்டணத்தை அறிந்து ஆன்லைனில் மாதந்தோறும் செலுத்தினால் போதும். கூடுதலாக வசூலித்தால் நேரடியாக என்னிடம் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டுக்குரிய கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை அந்தந்த கோர்ட் முன்பாக வைக்கப்படும்.
ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு ஆண்டுக்கு ரூ.354 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் இதை பயன்படுத்தி பயிற்சி பெறலாம் என்றார்.