பள்ளி மாணவர்களின் பெற்றோரே பி.டி.ஏ., பதவிக்கு தகுதியானவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பள்ளி மாணவர்களின் பெற்றோரே பி.டி.ஏ., பதவிக்கு தகுதியானவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
UPDATED : செப் 20, 2025 12:00 AM
ADDED : செப் 20, 2025 09:41 AM

மதுரை:
'பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மட்டுமே, பி.டி.ஏ., எனப்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளாக இருக்க தகுதியானவர்கள்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷெரீப் அப்துல்லா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பள்ளியில் வகுப்பறைகள் பழுதடைந்த நிலையில் இருந்தன. அவற்றை அகற்றும்படி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தலைமையாசிரியர் வலியுறுத்தினார்; நடவடிக்கை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் 2018ல் நடந்தது. அக்கட்டடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி அகற்றினேன். பொதுப்பணித்துறை அனுமதியின்றி, தலைமையாசிரியருக்கு தெரிவிக்காமல், முன்னறிவிப்பின்றி அகற்றியதாக போலீசார் என் மீது வழக்கு பதிந்தனர். அரசியல் உள்நோக்கில் ஒருவர் அளித்த புகாரின்படி வழக்கு பதியப்பட்டது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
துரதிர்ஷ்டவசமாக பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் அவற்றின் நோக்கத்திலிருந்து விலகி செல்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் நிர்வாகிகளாக பெரும்பாலும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தங்கள் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்து வெளியேறிய பிறகும், சிலர் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக பதவியில் நீடிக்கின்றனர். சில சமயங்களில் பள்ளிகளுக்கு சேவை செய்வதற்கு பதிலாக, தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் பயன் படுத்தப்படுகிறது.
அதற்கு இவ்வழக்கு ஒரு உதாரணம். அரசியல் முன்விரோதம் காரணமாக புகார் அளிக்கப்பட் டது என மனுதாரர் ஒப்புக் கொண்டுள்ளார். தன் குழந்தை அப்பள்ளியில் படிப்பை முடித்த பிறகும், மனுதாரர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தொடர்கிறார்; இது அதன் அடிப்படை கொள்கைக்கு முரணானது.
தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மட்டுமே நிர்வாகிகளாக தொடர முடியும். மாணவர்களின் நலனுக்காக பெற்றோரின் குரலாக இருப்பதற்கு பதிலாக, இங்கு அரசியல் போட்டிக்கான ஒரு கருவியாக கழகம் மாறியது.
இதன் விளைவாக ஒரு பொதுக்கட்டடம் அனுமதியின்றி அகற்றப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. தற்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மட்டுமே பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகளாக இருக்க தகுதியானவர்கள் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும்.
பள்ளி படிப்பை முடித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர் பதவியில் தொடர்வதை அனுமதிக்க முடியாது என, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.