UPDATED : அக் 23, 2024 12:00 AM
ADDED : அக் 23, 2024 10:00 PM
திருநெல்வேலி:
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஜல் நீட் அகாடமி என்ற பெயரில், கோச்சிங் சென்டரை, கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் நடத்தி வருகிறார். வகுப்பில் துாங்கிய மாணவர்களை, ஜலாலுதீன் பிரம்பால் தாக்கும் காட்சிகள், அங்கு வார்டனாக பணியாற்றி, பணி நீக்கம் செய்யப்பட்ட அமீர் உசேன் என்பவரால் வெளியிடப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஜலாலுதீன் மீது மேலப்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் தற்போது கேரளாவில் உள்ளார். இன்னும் கைது செய்யப்படவில்லை; முன் ஜாமின் பெற முயற்சித்து வருகிறார்.
இதற்கிடையே, ஜல் நீட் அகாடமியில் பயிலும் மாணவ - மாணவியருக்காக தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதி செயல்பட்டது. அங்கு ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள், முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டதற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
சுகாதார துறையின் உத்தரவால் நேற்று திருமண மண்டபத்தில் செயல்பட்ட விடுதிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் கடையநல்லுாரைச் சேர்ந்த அமீனா நர்கீஸ், திருநெல்வேலி ஜோதிநகரைச் சேர்ந்த வினோதினி உட்பட பலர், நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், மாணவர்களை பயிற்சியாளர் கண்டிக்கும் விஷயம் தங்களுக்கு தெரியும். இந்த சம்பவத்தை வார்டன் தான் பெரிதுபடுத்தி விட்டார். மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.