UPDATED : ஜூன் 15, 2025 12:00 AM
ADDED : ஜூன் 15, 2025 09:17 AM

 புதுடில்லி: 
துவாரகா டில்லி பப்ளிக் பள்ளியில் கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து, அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
தலைநகர் டில்லியில் பல தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. சில பள்ளிகளில் உயர்த்தப்பட்ட கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
தனியார் பள்ளிகளின் இந்தச் செயலை கண்டித்து பெற்றோர் பல போராட்டங்களை நடத்தினர். எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன. இந்நிலையில், துவாரகாவில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ஜந்தர் மந்தரில் நேற்று திரண்டனர். உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில், மற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் பெற்றோர் பலரும் பங்கேற்றனர். மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கல்வித் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் எங்கள் குழந்தைகளுக்கு நீதி வேண்டும். கட்டண உயர்வு குறித்து கேள்வி கேட்டால், எங்கள் குழந்தைகளை குறிவைத்து பழிவாங்குகின்றனர். விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

