கட் அடித்தால் பெற்றோருக்கு தெரிந்துவிடும்: மாணவர்களுக்கு கேரளாவில் ஆப் அறிமுகம்
கட் அடித்தால் பெற்றோருக்கு தெரிந்துவிடும்: மாணவர்களுக்கு கேரளாவில் ஆப் அறிமுகம்
UPDATED : ஜன 12, 2025 12:00 AM
ADDED : ஜன 12, 2025 10:19 AM

திருவனந்தபுரம்:
மாணவர்களின் வருகைப் பதிவேடு, அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், அவர்கள் பள்ளிகளில் நடந்து கொள்ளும் முறை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், கேரள அரசு சார்பில் புதிய மொபைல்போன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்.கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
மாநில பொதுக் கல்வித் துறைக்கு தொழில்நுட்ப சேவைகள் வழங்கும், கேரளா கல்வி கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மையம் என்ற அமைப்பு, புதிய இணையதள வசதியை துவக்கி வைத்துள்ளது. இதைத் தவிர, மொபைல்போன் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
சம்பூர்ணா பிளஸ் என்ற பெயரிலான இந்த இணையதளம் மற்றும் மொபைல்போன் ஆப் வாயிலாக, மாணவர்களின் முழு தகவல்களையும் பெற்றோர் தெரிந்து கொள்ள முடியும்.
மாணவர்களின் வருகைப் பதிவேடு, ஒவ்வொரு தேர்விலும் அவர்கள் பெறும் மதிப்பெண்கள், விளையாட்டு உள்ளிட்ட வற்றில் அவர்களுடைய ஈடுபாடு என, அனைத்துத் தகவல்களும் இந்த ஆப் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
மாநிலம் முழுதும், 12,943 பள்ளிகளில் படிக்கும், 36.44 லட்சம் மாணவர்களின் தகவல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் ஆப் சேவை சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவை, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிதும் உதவும்.
பெற்றோர், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் வாயிலாக, தங்களுடைய மொபைல்போன் எண்களை பதிவு செய்து, இந்த ஆப் சேவையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.