பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு தேவை: 'நீட்' விவகாரத்தில் காங்., வலியுறுத்தல்
பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு தேவை: 'நீட்' விவகாரத்தில் காங்., வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 12:05 PM
புதுடில்லி:
'நீட், தேசிய தேர்வு முகமை, என்.சி.இ.ஆர்.டி., ஆகியவை குறித்து பார்லி., நிலைக்குழு மதிப்பாய்வு செய்ய வேண்டும்' என, காங்., வலியுறுத்தி உள்ளது.
நாடு முழுதும் மே 5ல், 'நீட்' யு.ஜி., எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இதை, 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதன் முடிவுகள், கடந்த 4ல் வெளியாகின. நீட் தேர்வு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், 720க்கு 720 மதிப்பெண்ணை, 67 பேர் பெற்றனர்.
குற்றச்சாட்டு
வினாத்தாள் கசிவு, ஒருசில தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது போன்றவற்றால், இந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கிடையே, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட, 1,563 தேர்வர்களின் கருணை மதிப்பெண் திரும்பப் பெறப்பட்டதாகவும், அவர்கள் விருப்பப்பட்டால், மறு தேர்வில் பங்கேற்கலாம் என்றும், இல்லையெனில் கருணை மதிப்பெண்ணை கைவிடலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
நான், 2014 - 2019 வரை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான, பார்லி., நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்தேன். அப்போது, 'நீட்' தேர்வுக்கு நான் முழு ஆதரவை வழங்கினேன்.
ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள், நீட் தேர்வால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சலுகை கிடைக்கும் என்றும், மற்ற மாணவர்களுக்கு அது பாதகமாக இருக்கும் என்றும் கவலை தெரிவித்தனர்.
இந்த சி.பி.எஸ்.இ., பிரச்னைக்கு சரியான பகுப்பாய்வு தேவை. நீட் பாரபட்சமா? இதில், ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா? மஹாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களும், தற்போது 'நீட்' தேர்வு மீது கடுமையான சந்தேகங்களை தெரிவித்துள்ளன.
சந்தேகம்
இதனால், தேசிய தேர்வு முகமையின் நேர்மை மற்றும் நீட் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் விதம் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அனைத்து தொழில் திறனையும் இழந்து விட்டது.
பார்லி., நிலைக்குழுக்கள் புதிதாக அமைக்கப்படும் போது, நீட், தேசிய தேர்வு முகமை, என்.சி.இ.ஆர்.டி., ஆகியவை குறித்து, முன்னுரிமை அடிப்படையில் ஆழமாக மதிப்பாய்வு செய்யும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான், ஒடிசாவின் சம்பல்பூரில் நேற்று கூறியதாவது:
உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி, 1,563 பேருக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரு இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் உயரதிகாரிகள் யாராவது தவறு செய்திருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; யாரும் தப்பிக்க முடியாது. தேசிய தேர்வு முகமையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.