பணி நிரந்தரமும் இல்லை; சம்பளமும் இல்லை பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை
பணி நிரந்தரமும் இல்லை; சம்பளமும் இல்லை பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை
UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 08:01 AM

கோவை:
தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், மே மாத சம்பளம் கேட்டு, தமிழக அரசிடம் கோரிக் கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், 3 ஆயிரத்து 700 - உடற்கல்வி, 3 ஆயிரத்து 700 - ஓவியம், 2 ஆயிரம் - கணினி, 1 ஆயிரத்து 700 தையல் மற்றும் 300 இசை பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் உட்பட, 12 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். குடும்ப செலவுகளை சமாளிக்க, மே மாத சம்பளம் கேட்டுள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் கூறியதாவது:
2012ம் ஆண்டு முதல், பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை. ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், இப்போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த பணி பாதுகாப்பும் இல்லை. அரசு எங்களைக் கவனிக்கவில்லை. 16,549 பேர் பணியாற்றிய நிலையில், தற்போது 12,000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். தற்போது வழங்கப்படும் ரூ.12,500 தொகுப்பூதியத்தை மாற்றி, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
ஒரு மாத சம்பளமின்றி, குடும்பத்தை எப்படி சமாளிக்க முடியும்? மீனவர்கள் உள்ளிட்டோருக்கு வேலை இல்லாத காலத்தில் கருணைத் தொகை வழங்கும் அரசு, 13 ஆண்டுகளாக பணியாற்றும் எங்களுக்குப் பணி நிரந்தரம் அறிவிக்காமல் இருக்கிறது. தி.மு.க.,அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, மே மாத சம்பளமும் வழங்காமல் உள்ளது.
2022-2023ல் நியமிக்கப்பட்ட எமிஸ் ஆபரேட்டர்களுக்கே வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, தொகுப்பூதியம் ஆகியவை வழங்கப்படுகின்றன. அதே போல் எங்களுக்கும் தேவை.
இவ்வாறு, அவர் கூறினார்.