10, பி.யு., வகுப்புகளில் தேர்ச்சி மதிப்பெண் 33 ஆக குறைப்பு!: கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம்
10, பி.யு., வகுப்புகளில் தேர்ச்சி மதிப்பெண் 33 ஆக குறைப்பு!: கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம்
UPDATED : ஜூலை 26, 2025 12:00 AM
ADDED : ஜூலை 26, 2025 09:49 AM

பெங்களூரு:
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு., வகுப்புகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் சரிவை நோக்கிச் செல்கிறது. புதிய அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 33மதிப்பெண் எடுத்தாலே இனி தேர்ச்சி. இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 2025ம் ஆண்டுக்கான பி.யு., இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள், கடந்த ஏப்ரல் 8ம் தேதி வெளியாகின. இதில் 1.69 லட்சம் பேர் தோல்வி அடைந்தனர். 2024ல் 81.15 சதவீதம் ஆக இருந்த தேர்ச்சி, 2025ல் 73.45 சதவீதம் ஆக குறைந்தது.
தோல்வி அதே போல, 2025ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், கடந்த மே 2ம் தேதி வெளியாகின. தேர்வில் 2.67 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்தனர். 2024ல் 73.40 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், நடப்பாண்டில் 62.34 சதவீதமாக குறைந்தது.
இரண்டு முக்கியமான தேர்வுகளிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடுமையாக குறைந்தது. இது மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
எனவே, மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக, அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்தது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்குமாறு கடிந்து கொண்டார்.
உத்தரவு மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை உட்பட பல காரணங்களை அதிகாரிகள் முன்வைத்தனர். ஆனால், முதல்வர் சித்தராமையாவோ, காரணம் சொல்லாதீர்கள்; இருப்பதை வைத்து செய்து காட்டுங்கள் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாநில அரசு மிக முக்கியமான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு., 2ம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் குறைந்து வரும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை சரி செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் அளவை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
திருத்தம் இருப்பினும், இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரிய முதல் விதிமுறைகள் திருத்தம் என அழைக்கப்படும்.
தற்போதைய நடைமுறைப்படி, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு, மொத்த மதிப்பெண் 625க்கு 219 மதிப்பெண் பெற வேண்டும்.
அதாவது மொத்த மதிப்பெண்ணில் 35 சதவீதம் பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இதை 33 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி இதன்படி, 625 மதிப்பெண்ணுக்கு 206 மதிப்பெண்கள் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர். அதே சமயம், மாணவர்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு பாடத்திலும் 30 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்த இரண்டு விதிகளின்படி, மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
தற்போது, பி.யு., இரண்டாம் ஆண்டில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும், 100க்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். இது 33ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் 33 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
மாற்றம் செய்முறை தேர்வு இல்லாத பாடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 80க்கு குறைந்தபட்சம் 24 மதிப்பெண்கள் பெற வேண்டும். செய்முறை தேர்வுகள் உள்ள பாடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 70க்கு குறைந்தபட்சம் 21 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
அதுபோல, செய்முறை மற்றும் உள் மதிப்பீடு தேர்வுகளிலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. 30 மதிப்பெண்ணுக்கு நடந்த செய்முறை தேர்வுகள், 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடக்கும். மீதமுள்ள 10 மதிப்பெண்கள் மாணவர்கள் வருகை, நன் நடத்தைக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.