3வது மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் 10ம் வகுப்பு பொது தேர்வில் பாஸ்
3வது மொழி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் 10ம் வகுப்பு பொது தேர்வில் பாஸ்
UPDATED : ஜூலை 16, 2026 09:52 AM
ADDED : ஜூலை 16, 2026 09:55 AM

புதுடில்லி:
'தேசிய கல்வி கொள்கை வழிகாட்டுதலின்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், மூன்றாவது மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை 2027 - 28ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிக்கை:
மும்மொழி கொள்கையின்படி, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகளையும், ஒரு அன்னிய மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
மூன்றாவது மொழித் தேர்வு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இடம்பெறாது. எனினும், அந்தப் பாடத்தில் பள்ளி நடத்தும் அக மதிப்பீட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில், 2026 - 27ல் ஏற்கனவே 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. 2026 - 27ல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே இந்த விதி பொருந்தும். 10ம் வகுப்பில் மூன்றாம் மொழித் தேர்வு, அகமதிப்பீட்டில் மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக, பள்ளிகள் மறுமதிப்பீடு நடத்த வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பில், மூன்றாம் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 10ம் வகுப்பு பயில அனுமதிக்கப்படுவர். அதே சமயம், 10ம் வகுப்பில் படிக்கும் போதே, ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த மூன்றாம் மொழித் தேர்வை மீண்டும் எழுதி அகமதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயம் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்ற புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், கோபால் சங்கரநாராயணன் முன்வைத்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், சி.பி.எஸ்.இ., ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
