புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை: உலகில் 3வது இடத்தில் இந்தியா
புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை: உலகில் 3வது இடத்தில் இந்தியா
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 11:25 AM
சென்னை:
புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதில், உலகில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீத்தாராம் பேசினார்.வேலுார் வி.ஐ.டி., பல்கலை விழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சீத்தாராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
புதிய முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்துவதில், நம் நாடு முனைப்புடன் உள்ளது. கொரோனா காலத்தில் முன்னேறிய நாடுகள் திணறிய போது, இந்தியா, 300 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரித்து, 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.கடந்தாண்டில் மட்டும், 1.25 லட்சம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் தற்போது நாடு சிறந்து விளங்குகிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதில், உலக அளவில் மூன்றாவது நாடாக இந்தியா முன்னேறி உள்ளது.புதிய கல்விக்கொள்கை வாயிலாக பெண்களும், இளைஞர்களும் திறன் உள்ள கல்வி, வேலைவாய்ப்புகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில் மாணவர்களின் கல்வியைக் கடந்து, தனித்தன்மைக்கே வேலை கிடைக்கும். அதற்கேற்ப மாணவர்கள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பல்கலை வேந்தர் கோ.விஸ்வநாதன் பேசுகையில், கல்வி உதவித்தொகை வழங்குவதிலும், இலவச கல்வி வழங்குவதிலும், வி.ஐ.டி., பல்கலை முன்னுதாரணமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ஆறு சதவீதம் ஒதுக்கினால், உயர்கல்வி விகிதத்தில், 155வது இடத்தில் இருந்து நாட்டை முன்னேற்றலாம் என்றார்.நிகழ்ச்சியில், வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி, ச.விஸ்வநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.