பட்டாபிராம் டைடல் பார்க் தயார்; வடசென்னையில் 5,000 வேலைவாய்ப்பு
பட்டாபிராம் டைடல் பார்க் தயார்; வடசென்னையில் 5,000 வேலைவாய்ப்பு
UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 11:54 AM
சென்னை:
தமிழக அரசு, சென்னையை அடுத்த பட்டாபிராமில், டைடல் பார்க்கை கட்டி முடித்ததை அடுத்து, விரைவில் திறக்கப்பட உள்ளது. இதனால், வட சென்னையில், ஐ.டி., துறையில், 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின், டிட்கோ எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனமும், எல்காட் எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து, சென்னை தரமணியில், டைடல் பார்க்கை கட்டின. உலக தரத்தில், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட அங்கு, பல ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதை ஒட்டிய பகுதியிலும் பல ஐ.டி., நிறுவனங்கள் இயங்குகின்றன. இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இதேபோன்று, வட சென்னையிலும், ஐ.டி., மற்றும் அதை சார்ந்த துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க, ஆவடி பட்டாபிராமில், 11.41 ஏக்கரில், 5.57 லட்சம் சதுர அடியில், டைடல் பார்க் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திட்டச் செலவு, 285 கோடி ரூபாய்.
இங்கு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக மேலாண்மை நிறுவனங்கள், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், தங்களின் தொழிலை துவக்க இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தென் சென்னையில், ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. அதேசமயம், வட சென்னையில் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இந்நிலையில், வடசென்னையிலும் ஐ.டி., வேலைவாய்ப்பை உருவாக்கவும், நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும், பட்டாபிராமில், 21 தளங்களுடன் கூடிய டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது.
அதில், அலுவலகங்கள், கூட்டங்களுக்கான அறை, உணவுக் கூடம் என, அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால், வட சென்னையில் ஐ.டி., துறையில், 5,000 - 6,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.