பாவை கல்வி நிறுவனங்களில் கிராமப்புற இளைஞர் தொழில்நுட்ப மையம் துவக்கம்
பாவை கல்வி நிறுவனங்களில் கிராமப்புற இளைஞர் தொழில்நுட்ப மையம் துவக்கம்
UPDATED : நவ 06, 2026 08:14 PM
ADDED : நவ 06, 2026 08:15 PM
ராசிபுரம்:
ராசிபுரம், பாவை கல்வி நிறுவனங்களில், கிராமப்புற இளைஞர்கள் தொழில்நுட்ப மைய தொடக்க விழா மற்றும் ஐ.ஐ.டி.எம்., பிரவர்தக் டெக்னாலஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பாளராக ஐ.ஐ.டி.எம்., பிரவர்தக் நிறுவன மூத்த திட்ட மேலாளர் ரம்யா வாசுதேவன் கலந்து கொண்டார். தகவல் தொழில்நுட்பத் துறை இறுதியாண்டு மாணவி ஹரிணி வரவேற்றார். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றினார்.
விழாவில் ரம்யா வாசுதேவன் பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தனிமனித முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பயன்பட வேண்டும். இம்மையத்தின் மூலம் ராணுவம், விண்வெளி அறிவியல் போன்ற துறைகளில், திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்க முடியும்.
அர்ப்பணிப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றுடன் செயல்பட்டால், எதிர்காலத்தில் இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகின் முன்னணி நாடாக உயர்த்துவதில் முக்கியப் பங்காற்ற முடியும்.
இவ்வாறு பேசினார்.
பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடராஜன், ஐ.ஐ.டி.எம்., பிரவர்தக் டெக்னாலஜி நிறுவன மூத்த திட்ட மேலாளர் ரம்யா வாசுதேவன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின், இளைஞர்கள் தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்தனர்.
பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் ராமசாமி, செந்தில், கிருஷ்ணமூர்த்தி, பாவை பொறியியல் கல்லுாரி முதல்வர் பிரேம்குமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
