பள்ளிகளுக்கு செல்லும் முன் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம்!
பள்ளிகளுக்கு செல்லும் முன் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம்!
UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 11:07 AM

கோவை:
பள்ளிகளின் கோடை விடுமுறை, இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. தீம் பார்க், தாத்தா பாட்டி, உறவினர் வீடுகளுக்குச் செல்வது, பார்க், சினிமா, சம்மர் கேம்ப் என கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும், குழந்தைகள் 'என்ஜாய்' செய்திருப்பர்.
அதை தாண்டி, பெற்றோர், குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு இன்னும் சில இடங்கள் இருக்கின்றன. இன்றும் நாளையும் இங்கும் ஒரு விசிட் அடித்து விடலாம்!
குழந்தைகள் போக்குவரத்து பூங்கா
பாலசுந்தரம் ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா அமைந்திருக்கிறது. இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியுடன், போக்குவரத்து விதிமுறைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும் முறை, போக்குவரத்து விதிமுறைகள், போலீசார் செயல்படும் முறை போன்றவற்றை குழந்தைகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நம் குழந்தைகளுக்கு நிச்சயம் தேவை என நினைப்பவர்கள், சென்று பார்க்கலாம்.
காஸ் வன அருங்காட்சியகம்
ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் சாலையில், வனத்துறை அலுவலக வளாகத்தில் காஸ் வன அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. 1902ல் துவங்கப்பட்ட இந்த நூற்றாண்டு கடந்த அருங்காட்சியகத்தில், இந்திய வனம் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறிய தாவரத்தின் விதை முதல், 400 ஆண்டுகளைக் கடந்த மரம், மிகப்பெரிய விதை, சிறு பிராணிகளின் முட்டை, உலகின் மிகப்பெரிய முட்டை, யானை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புக்கூடு, பதப்படுத்தப்பட்ட வன உயிரினங்கள், பழைய வேட்டைக் கருவிகள் என விரிகிறது இந்த அருங்காட்சியகம். ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் தவிர, இதர வேலை நாட்களில் செல்லலாம்.
மண்டல அறிவியல் மையம்
கொடிசியா சாலையில் அமைந்திருக்கிறது மண்டல அறிவியல் மையம். குழந்தைகள் விளையாடிக் கொண்டே அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள், இயற்பியல் விதிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளன.
6,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆடைகளில் இருந்து தற்போதைய ஜவுளித் தொழில்நுட்பம் வரை காட்சிப்படுத்தியுள்ளனர். வானியல் சார்ந்த புகைப்படங்கள், கோள்களுக்காக தனி அரங்கு, சிறிய கோளரங்கம், 360 டிகிரி கோணத்தில், 3 டி தொழில்நுட்பத்தில் வானியல் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
நமது அன்றாட வாழ்வில் பார்க்கும், பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இயங்கும் முறை பற்றி செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். அறிவியல் விதிகளை, 3டி, மேஜிக் பைப், ஒளி, நிழல் என பயன்படுத்தி எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
இங்கு செல்வதால் ஜாலியாக பொழுது போக்குவதுடன், கற்றுக் கொள்ளவும் முடியும் என்பதுதான் இந்த இடங்களின் சிறப்பம்சம்.
இதுவரை பார்க்காதவர்கள், கட்டாயம் ஒரு விசிட் அடிக்க வேண்டிய ஒரு இடம்!