ரூ.40 கோடியில் 21 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி
ரூ.40 கோடியில் 21 பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி
UPDATED : மார் 07, 2025 12:00 AM
ADDED : மார் 07, 2025 09:14 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 உயர்நிலைப் பள்ளி, 51 மேல்நிலைப் பள்ளி என, 101 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான அரசு பள்ளிகளின் கட்டடம், 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.
மழைக்காலங்களில், சேத கட்டடங்களில் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத நிலைக்கு, மாணவ - மாணவியர் தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு, கல்வித் துறையினர் பரிந்துரை செய்தனர்.
இதை ஏற்று, நபார்டு என, அழைக்கப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நிறுவனத்தின் உதவியுடன் 21 புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
அதன்படி, காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை உட்கோட்டத்தில் ஆறு பள்ளிகள். ஸ்ரீபெரும்புதுார் உட்கோட்டத்தில், 10 பள்ளிகள். உத்திரமேரூர் உட்கோட்டத்தில், 5 பள்ளிகள் என, 21 பள்ளிகள் கட்டப்பட உள்ளன.
இந்த பள்ளி கட்டடங்களில், மூன்று வகுப்பறை முதல், 14 வகுப்பறைகள் வரையில் கூடிய புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு 40.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் பொதுப்பணி துறையினர் டெண்டர் விட்டுள்ளனர். கோடை கால விடுமுறையில், கட்டுமான பணிகள் துவக்கி, அடுத்த கல்வி ஆண்டிற்குள் புதிய வகுப்பறை கட்டடங்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் வாயிலாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தரமான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கிடைக்கும் என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நபார்டு வங்கி உதவியுடன், 40.24 கோடி ரூபாய் செலவில், 21 புதிய பள்ளி கட்டடங்கள் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது. அடுத்த கல்வி ஆண்டிற்குள் பணிகள் நிறைவு பெற்று, மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், சில பள்ளிகளை தேர்வு செய்து, அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு பெற்று, புதிய கட்டங்களை கட்டித்தர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.