கோலார் அல்லது சிக்கபல்லாபூரில் மருந்து தொழிற்பூங்கா அமைப்பு
கோலார் அல்லது சிக்கபல்லாபூரில் மருந்து தொழிற்பூங்கா அமைப்பு
UPDATED : அக் 24, 2024 12:00 AM
ADDED : அக் 24, 2024 06:27 PM
பெங்களூரு:
கோலார் அல்லது சிக்கபல்லாபூரில் உயர்த்தர மருந்து தொழிற்பூங்கா அமைக்கப்படும் என கனரக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில், பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவன தலைவர்களுடன், நேற்று தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கோலார் அல்லது சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், உயர்தர மருந்து தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதுதொடர்பாக மருந்து உற்பத்தி துறை நிபுணர்கள், விஞ்ஞானிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய, பத்து துறைகளை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் மருந்து உற்பத்தித் துறையும் ஒன்று. இத்துறையில் ஆண்டுதோறும் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் இதன் வருவாய், 130 பில்லியன் டாலர்களை எட்டும்.
குறைந்த விலையில் மருந்துகள், தடுப்பூசிகள், மருந்து பொருட்கள் ஏற்றுமதியால், அதிகபட்ச வருவாய் கிடைக்கிறது.
மருந்து துறையில் இருந்து வரும் வருவாயில், மாநிலத்தின் பங்கு 11 சதவீதமாகும். பயோடெக் துறையின் வருவாய் மற்றும் ஏற்றுமதியில் நமது பங்களிப்பு 60 சதவீதமாகும். இதை அதிகரிக்க, மேலும் முதலீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில், தங்கள் ஆராய்ச்சி முன்மாதிரிகளை, காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.