உடற்கல்வி ஆசிரியர் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ளது: அண்ணாமலை
உடற்கல்வி ஆசிரியர் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ளது: அண்ணாமலை
UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:52 AM

சென்னை:
தமிழக அரசு, 250 - 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற விகிதத்தையே தொடர வேண்டும்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 250 - 400 பள்ளி மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 நபருக்கு ஒரு ஆசிரியர் என்பதாக மாற்றி, இம்மாதம், 2ல் அரசாணை பிறப்பித்திருக்கிறது தி.மு.க., அரசு.
பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு புதிய நியமனம் செய்வதைக் குறைக்கும் நோக்கில், இந்த அரசாணை பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியான தி.மு.க., அரசின் புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் உடற்கல்வியையும், விளையாட்டு திறனையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அரசியல் நாடகத்திற்காக கல்வி கொள்கை குழு என்ற பெயரில், தி.மு.க., அரசு அமைத்த குழு அறிக்கையை, முதல்வரோ, அமைச்சர்களோ ஒருவர்கூட படித்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகிறது. வெறும் விளம்பரத்துக்காக ஒரு குழுவிற்கு இரு ஆண்டுகள் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு இருக்கிறது.
புதிய அரசாணை வாயிலாக, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. மேலும், பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்து மாணவர்களை ஓரளவிற்கு காப்பாற்றி வருவது, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தான்.
கஞ்சா விற்பனைக்கு தடையாக இருக்கும் அவர்களை தடுப்பதற்காகவே, இதுபோன்ற வினோதமான அரசாணையை, தி.மு.க., அரசு பிறப்பித்து இருப்பதாக எண்ண வேண்டியுள்ளது. உடனே, அரசாணையை ரத்து செய்வதுடன், முந்தைய நிலையே தொடர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.