UPDATED : ஏப் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு இலவச பைலட் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் தமிழரசி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 50 மாணவர்களும் 50 மாணவிகளும் பயன்பெறும் வகையில் ஏர்ஹோஸ்டஸ் மற்றும் கேபின் க்ரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர். நேஷனல் மாரிடைம் அகாதெமி, தமிழ்நாடு மாரிடைம் அகாதெமி மற்றும் சில சிறந்த தனியார் நிறுவனங்களில் 100 மாணவர்களுக்கு கடல்சார் துறைகளில் பயிற்சிகள் அளிப்பதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் அதற்கு உரிய தேர்வு எழுதுவதற்கு பயிற்சி அளிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிஏ, சிடபிள்யூஏ படிக்கும் 25 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயின மாணவர்களுக்கான செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் அமைச்சர் தமிழரசி தெரிவித்துள்ளார்.