பால்குடியில் பாதிப்படைந்த பால்வாடி பரிதாபத்தில் மாணவர்கள்
பால்குடியில் பாதிப்படைந்த பால்வாடி பரிதாபத்தில் மாணவர்கள்
UPDATED : ஏப் 12, 2024 12:00 AM
ADDED : ஏப் 12, 2024 10:15 AM
மேலுார்:
பால்குடியில் செயல்படும் அங்கன்வாடி மையம் சிதிலமடைய ஆரம்பித்துள்ளதால் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கச்சிராயன்பட்டி, பால்குடியில் 13 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டது. இம் மையத்தில் பால்குடி, கருப்புகோவில் உள்பட 4 கிராமங்களின் 40 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இம் மையம் போதிய பராமரிப்பில்லாமல் உட்பகுதி சுவரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தளம், வெளிப்புறங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன.
பெற்றோர் காஜா கூறியதாவது:
சிதிலமடைந்த மையத்திற்கு குழந்தைகளை அச்சத்துடனே அனுப்புகிறோம். இங்கு ஆரம்பத்தில் அதிக குழந்தைகள் படித்தனர். தற்போது பாதுகாப்பு கேள்விக்குறியானதால் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. மின் இணைப்பு பெட்டி குழந்தைகள் தொடும் உயரத்தில் உள்ளது.
உப்புத் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். அதனால் நோய் தொற்றால் பாதிக்கின்றனர். மையத்தை பழுது பார்க்கும்படி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விபரீதம் நிகழும் முன்பாக நடவடிக்கை எடுப்பார்களா தெரியவில்லை, என்றார்.